search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி அதிகரிப்பு"

    அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது.
    வாஷிங்டன்:

    உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த அதிரடியை அவர் மேற்கொண்டார். அதன்படி சீன இறக்குமதி பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) அளவுக்கு கடந்த ஆண்டு வரி விதித்தார்.

    டிரம்பின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனாவும் வரியை அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தகப்போர் நடந்து வருகிறது.

    எனினும் இந்த வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. தற்போதுகூட சீன துணை பிரதமர் லியு ஹி, வாஷிங்டனில் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

    இதில் அதிக முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் சீன பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு மேலும் வரி விதிப்பை அதிகரித்து நேற்று டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரி அதிகரித்து இருப்பதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலில் வருவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடியை மேற்கொண்டிருப்பது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆழ்ந்த வருத்தத்தை சீனா வெளியிட்டு உள்ளது.

    அதேநேரம் டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக சீனாவும் அறிவித்து உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகப்போர் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ×